Monday, February 17, 2014

காரைக்குடி பயணம் பகுதி 5: கதை கேளு! கதை கேளு! புதுக்கோட்டை கதை கேளு!

Portrait of His Highness Dambadas Ramachandra Thondaiman Bahadur. Oil painting on canvas by Raja Ravi Varma 
       
ஊரிலே நுழைந்ததுமே தெரிந்தது, தமிழக நகர்களில் புதுக்கோட்டை வேறஜாதி என்று. அகலமான வீதிகள், திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நாற்சந்திப்புகள் என சிறிதே வித்தியாசமாக இருந்தன. ஏற்கனவே பார்த்த திருப்பத்தூர் மற்றும் காரைக்குடியை விட இது நிச்சயமாக பெரிய ஊர். சாலையெங்கும் பறந்த புழுதிதான் இதுவும் நம்மூர்தாங்கோ என்று  சொன்னது.
District court
பிரிட்டிஷ் கால சிவப்புக் கட்டிடம் வழியாக கார் ஊர, அதுதான் மாவட்ட நீதிமன்றம் என்றார்கள். அதன் முன்னால் கம்பீரமான புதுக்கோட்டை மன்னர் மாட்சிமை தங்கிய மார்த்தாண்டவர்ம பைரவ தொண்டைமான் சிலை இருந்தது.
புதுக்கோட்டை சமஸ்தானம் பிறந்த கதை
       புதுக்கோட்டை, முதலில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் சேதுபதி ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. ராமநாதபுரத்தைச்சேர்ந்த திருமயத்தின் ஆளுநராக ரகுநாத தொண்டைமான் இருந்து வந்தார். அச்சமயத்தில் ராமநாதபுரத்தின் சிறப்பு வாய்ந்த மன்னர் ரகுநாத கிழவன் சேதுபதி, (கிழவன் என்றால் இங்கு வயதானவன் என்று அர்த்தம் இல்லை) தொண்டைமான் சகோதரியான கதலி நாச்சியாரை மணக்கிறார். சில காலம் கழித்து, சிறப்பாக திருமயத்தை ஆளும் தொண்டைமானுக்கு புதுக்கோட்டைப் பகுதியையும் சேர்த்து அளிக்கிறார். கிழவன் சேதுபதி இறந்தவுடன் ரகுநாத தொண்டைமான் தன்னை சுதந்திர அரசராக பிரகடணம்  செய்கிறார்.
Tondaiman Durbar by Raja Ravivarma 
       அப்போதிருந்து மற்ற பாளையங்கள் சமஸ்தானங்கள் அழிந்தாலும் இந்தியா சுதந்திரம் வாங்கும் வரை இந்த சமஸ்தானம் நிலைத்து நின்றதற்குக் காரணம் இவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடங்கிப்போனதால்தான். ஆங்கிலப்படைகளுக்கு உதவியாக, ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகிய மன்னர்களை புதுக்கோட்டை எதிர்த்து போர்புரிந்தது. எனவே தான் தமிழ்நாட்டில் மற்ற பாளைத்தார் சமஸ்தானங்கள் எல்லாம் அழிந்து போக, புதுக்கோட்டை நிலைத்ததோடு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 17 முறை பீரங்கி ஒலிக்கும் (Gun salute)  மரியாதை தரப்பட்டது.
       பிரிட்டிஷ் அரசாங்கம் தனக்கு உதவியாக இருந்த அரசர்களுக்கு, அவர்கள் எந்தக் கோட்டைக்கு விஜயம் செய்தாலும் அவரவர் தகுதிக்கு ஏற்ப பீரங்கி முழக்க வரவேற்பு கொடுத்தனர். அதில் புதுக்கோட்டை மன்னருக்கு 17 முறை.
       இந்தியா சுதந்திரம் வாங்கும்போது புதுக்கோட்டை ஒரு தனிப்பட்ட நாடாக இருந்தது. ஆனால் அப்போதிருந்த ராஜா ராஜகோபால தொண்டைமான் (1928-1948) அவர்களின் முடிவின்படி, ஏப்ரல் மாதம் 1948-ல் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இணைந்தது. கிபி.1686-ல் உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் 1948 அதாவது 262 ஆண்டு காலம் கழித்து முடிவுக்கு வந்தது.


       புதுக்கோட்டை மன்னரின் அழகான அரண்மனை இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்படுகிறது. 

புதுக்கோட்டையில்  நன்கு பராமரிக்கப்படும் மியூசியம் ஒன்று இருக்கிறது. புதுக்கோட்டை மன்னர்கள் பயன்படுத்திய அரிய பொருட்களோடு, குடுமியான் மலை, சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அரிய பொருட்கள் காட்சிக்கு இருக்கின்றன.

 புதுக்கோட்டைக்கு செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு கண்டிப்பாக செல்லுங்கள். என்னுடைய நாணயங்கள் சேகரிப்பில் புதுக்கோட்டை நாணயங்களும் உண்டு.

        “எட்வின் அண்ணா, ரொம்ப தேங்க்ஸ்னா. மணி மூன்று ஆகிறது, அடுத்து எங்கே”, என்றேன். "அடுத்து சித்தன்ன வாசல்", என்றார்.

 சூப்பரோ சூப்பர் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் போகிறோம் என்று முதலிலேயே சொல்லாமல், ஒரு இடம் பார்த்து முடித்தவுடன், அடுத்த இடத்தைச் சொல்லி அசத்தியது, எனக்கு ரொம்பப்பிடித்தது.

 முழுவதுமாக எப்போதும் திட்டமிடும் எனக்கு, இது ஒரு வித்தியாசமான அனுபவம். இது புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதி, ஒரு நல்ல மொட்டைப்பாறை.

 உயரமான இந்தப் பாறைப் பகுதியில் ஏறிச்சென்றால் சமணர்களின் குடைவரைக் கோயிலான இந்தச் சிறிய குகையில்  சித்தன்னவாசலின் ஓவியம் சிரித்தது.

 மிகச் சிதிலமடைந்து இருந்த அந்த ஓவியத்தின் முழுப்பகுதி, எப்படி இருந்திருக்கும் என்று  பக்கத்தில் இருந்த தற்கால ஓவியத்தைப் பார்த்துத் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதிலே இருந்த அலுவலர் ஒருவரும் வந்து அதனை விளக்கிக் கூறினார். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
       இந்த மாதிரி மொட்டைப் பாறைகள் கிடைத்தால் சமணர்கள் விடுவதில்லை. அதனைக் குடைந்து மண்டபங்கள் உருவாக்கி, கற்படுக்கைகளை உருவாக்கி தவம் செயயத்துவங்கி விடுவார்கள். பெரும்பாலும் பொதுமக்களை விட்டு விலகியே இவர்கள் வாழ்ந்தனர். இந்த இடத்தில் கி.மு.2ஆம் நூற்றாண்டு (நன்றாகப் பாருங்கள் கி.மு. கி.பி இல்லை) முதற்கொண்டு சமணர் வாழ்ந்து வந்தார்களாம். இங்குள்ள பிராமி எழுத்துக்களே அதற்கு சாட்சி.
       இந்தக் குகைக்கோவிலில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. முதலாவது உள்ள 'அர்த்தமண்டபத்தில்' தீர்த்தங்கரர்களின் சிலை இருக்கிறது. அதன் உட்பகுதியில்தான் கருவறை இருக்கிறது. அர்த்த மண்டபத்தின் கூரையில்தான் ஓவியம் இருக்கிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான ஒன்றாம் இது. தவம் செய்து செய்து போர் அடித்துப்போன முனிவர்கள் பொழுதுபோக்குக்காக இதனை வரைந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.


       நண்பர்களே முற்றிலும் அழிவதற்குள் ஒருமுறை பார்த்துவிட்டு வந்து விடுங்கள்.

       இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கருவறையை நோக்கும்போது ம் அல்லது ஓம் என்ற சத்தம் அப்படியே குகையை நிரப்புகிறது. அது எப்படி என்று தெரியவில்லை. வெளியே வந்தால் குகையை சுற்றியிருந்த கம்பி வலைகளில் ஒரு கட்டுவிரியன் சுற்றிக்கிடந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும் >>>>>>>>>>>>>>>

பின் குறிப்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி  23 ) சன் டிவியில் கல்யாண மாலை பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா நடுவராக பங்கு கொண்ட ,  பட்டிமன்ற ராஜா அணியில், “ குடும்ப வாழ்வு சுவைப்பது  அமெரிக்காவில்தான்” என்ற  தலைப்பில் அடியேன் பேசுகிறேன். 

16 comments:

  1. படங்கள் அருமை....வரலாற்று செய்தியை தாங்கி வரும் பதிவு என்பதால் படம் மட்டும் பார்த்து ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்
      என்னவோ தெரியலை , வயசாக வயசாக வரலாற்றின் மேல் ஒரு ஈர்ப்பு .

      Delete
  2. Replies
    1. தங்களுடைய வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி .

      Delete

  3. அதன் பின் உலக நாயகனாக மாறிவிடுவிங்க.. உலமெங்கும் இருக்கும் பெண்களிடத்தில் இருந்து அழைப்புகள் வந்து உங்களை தொந்தரவு படுத்தும். பிஸியா ஆகிடுவிங்க... அந்த நேரத்தில் உங்களுக்கு அசிஸ்டண்டாக வேலை பார்க்க நான் ரெடி? ஏதோ பார்த்து கொடுங்க சம்பளத்தை

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி .

      Delete
  4. அன்புள்ள ஆல்ஃபி,

    புதுக்கோட்டை அரசர் பற்றிய ஆராய்ச்சி நன்றாக இருந்தது. ஆனால் அவர்கள் ஏன் சுதந்திர வேட்கை கொள்ளவில்லை என்பது மட்டும் நெருடலாக இருந்தது. அருங்காட்சியகம் மற்றும் சித்தன்ன வாசல் முதலியவற்றைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது, ஆனால் எட்வின் அண்ணாவை எங்கே பிடிப்பது என்று நீங்கள் சொல்லவேயில்லை. குகையில் ஓம் என்ற ஒலி என்று நினைத்த்ததால் காட்டு வீரியன் பாம்பு உங்களைப் பார்த்து முறைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

    பயணக்கட்டுரை பாங்காக இருந்தது. நன்றி.

    இங்கனம்,

    ரங்கநாதன் புருஷோத்தமன்

    ReplyDelete
    Replies
    1. நாட்டையும் பதவியையும் காப்பாற்றுவதில் சிலர் உயிரை இழந்தனர் , சிலர் மானத்தை இழந்தனர் .

      Delete
    2. மன்னர்கள், ஆட்சியாளர்களின் முதல் கடமை மக்களைக் காப்பது. அதை விடுத்து அடுத்தவன் மீது போர் தொடுத்தல் இழப்பை யார் கொடுப்பார்கள். புதுக்கோட்டை மக்கள் சமாதானமாக வாழ்ந்ததை போற்றுவோம். இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் அன்னிய நாட்டின் அடிமைகளாகவும், மக்கள் அவர்களின் கைக்கூலிகளாக இருப்பதுதான் உண்மை நிலவரம்.

      Delete
    3. ஓ இதை இப்படியும் பார்க்கலாம்தான் , நன்றி ராஜேந்திரன்

      Delete
  5. உங்கள் பட்டிமன்ற பேச்சு அடுத்த வாரம் ஞாயிறு 9 மணிக்கு சன் தொலைக்காட்சியில் வரும் வரை காத்திருப்பேன். உங்கள் பேச்சை கேட்க ஆவலாக இருக்கிறது.

    ரங்கநாதன் புருஷோத்தமன்

    ReplyDelete
  6. படம் பொக்கிசம்... நன்றி... முடிவில் திக்...

    வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக பார்க்கிறோம்...

    ReplyDelete
  7. தங்களுடைய வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி .திண்டுக்கல் தனபாலன் .

    ReplyDelete
  8. சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்.....

    கட்டுவிரியன்.... ஓ.... பயங்காட்டாதீங்க! :))) தொடர்ந்து படிக்க ஆவலுடன்...

    ReplyDelete
  9. தங்களுடைய வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete