Monday, September 30, 2013

மெய்ன் பயணம் Part 3 : வஷிஸ்டர் வாயால் ப்ரும்ம ரிஷி பட்டம் !!.

        

     எப்படித்தான் பார்த்தாளோ? குதிரை வண்டியில் போனால் முன்னால் பார்த்து போக வேண்டியதுதானே என்று நினைத்த வண்ணம், அவசர அவசரமாக ஐபாடின் இயர் பிளக்கை காதில் சொருகினேன். இவெள்ட்ட பாட்டு வாங்கும்போது, என் பாட்டுக்கு  நான் போடுறுது, நம்ம இளையராஜா பாட்டுதேன். இளையராஜா "அந்தியில் பூத்த செவ்வந்திப்பூவைத்தேடத்துவங்கினார்". என்றுமே வாடாத பூ அல்லவா இந்த பூ .கஷ்டத்திலும், நஷ்டத்திலும், இஷ்டத்திலும் இளையராஜாதானே நமக்குத்துணை. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்துவிட்டது. எல்லாருமே வெள்ளைக்காரர்கள், நாங்கள் மட்டுமே இந்தியர். கறுப்பர்களையும் காணோம்.
        ஆற்றுக்கு அக்கறையில், ஒரு பெரிய மிதவையில இரண்டு ஆட்கள் வந்து வெடிகளை ஒழுங்கு செய்தனர். சிறிது நேரத்தில் இருட்டிவிட,  வாணவேடிக்கை ஆரம்பித்தது. விண்ணில் சீறிப்பாய்ந்து, வெடித்து, பூமழையையும், நட்சத்திர மழையையும் தூவியது, கண்கொள்ளாக் காட்சியாகும். நியூயார்க் மேசிஸ் ஃபயர் வொர்க்ஸ், கோனி ஐலன்ட், வாஷிங்டன் டிசி, நியூஜெர்சி, பென்சில்வேனியா என்று பல இடங்களில் பார்த்திருந்தாலும் இது சலிக்கவே சலிக்காது.
       
   
ஒரே ஒரு வித்தியாசம், மற்ற எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர் மூலம் இயக்குவார்கள். இங்கு அந்த இரண்டு ஆட்களும் ஓடி ஓடிக்கொளுத்தியது சிறிது வேடிக்கையாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு அற்புதமாய் இருந்தது.கூடியிருந்த மக்கள் வித்தியாசமான வாணத்தைப் பார்க்கும் போதெல்லாம், ஆரவாரித்து கைதட்டி மகிழ்ந்தனர். 


        ஒளி வெள்ளத்தில் சலசலத்து ஓடிய கென்னபெக் ஆறு தங்கப்பாளமாய் மின்னியது பேரழகாய் இருந்தது. முடிந்தவுடன் மக்கள் ஒரு 5 நிமிடம் விடாது கைதட்டி தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
        எவ்வளவு கூட்டம் இருந்தாலும், யாரும் முண்டியடிக்காமல் ஒருவரை ஒருவர் இடிக்காமலும், முந்தாமலும் கலைந்தனர். ரூமுக்கு திரும்பியதும், சில நிமிடங்களில் சூடான இட்லியும், மிளகாய்ப்பொடியும் கொடுத்தாள் ரூத். அட எப்ப செய்து எடுத்து வந்தாள் என ஆச்சரியப்பட்டுப் பாராட்டினேன். ஒரு பேக் பொன்னி அரிசி, குக்கர் மற்றும் காரக்குழம்பு, ருச்சி தக்காளி மிக்ஸ், புளியோதரை மிக்ஸ், வத்தக்குழம்பு மிக்ஸ் என பல வகைகள் இருப்பதால் ஒவ்வொரு இரவும் பிரச்சனையில்லை.
        மற்றவர்கள் எல்லாம் சாதத்தில் கத்தரிக்காய் காரக்குழம்பை குழப்பி அடித்தனர். “பின்னி” என் மனைவியை நோக்கி வழக்கம் போல், "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" என்று பாடிக்கொண்டே ஒரு பிடி பிடித்தான். அவன் மனைவி கிப்ஃடாவுக்கும் சமையலுக்கும் எந்த சம்பந்தமுமில்லையாதலால், என் மனைவிதான் அவனுக்கு அன்னலட்சுமி.
        அந்த நாளில் நடந்தவற்றை அசைபோட்டபடி படுக்கைக்குச்சென்றோம்.  ஃபோம் தலையணையில் தலையை நுழைத்து, ஸ்பிரிங் மெத்தையில் குப்புறப்படுத்து, ஆஹா ஆஹா, உழைத்து, களைத்த இந்த இளைத்த உடம்பை, ஃபோமில் இழைத்த மெத்தையில் கிடத்தி தலையை பஞ்சுப்பொதி தலையணையில் நுழைத்த போது ஆஹா ஆஹா.
****************************************************************************************************
          மறுநாள் சனிக்கிழமை (July 5, 2013) காலையில் எழுந்து, யோகா, மெடிட்டேஷன், ஓட்டப்பயிற்சி ஆகியவற்றையெல்லாம் வழக்கம் போல் !!!!!!!!!!, இருங்க அவசரப்படாதீங்க, ஏன் டென்ஷன் ஆகிறீங்க, வழக்கம் போலவே, செய்யாமல், ரெடியாகி, இவர்களையும் கிளப்பினேன். (டேய் சேகர், ஸ்கூலில் நீ மாவட்ட அளவில் விளையாடிய பெரிய ஸ்போர்ட்ஸ்மென் அல்லவா? / ஒன்னோட லந்துக்கு ஒரு அளவில்லையா மகேந்திரா?) நானும் இதை அமெரிக்கன் காலேஜில் பெருமையாக சொன்னபோது, எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்று எனக்கு விளங்கவேயில்லை. அது என்ன கேமுன்னு நீங்க யோசிச்சு வைய்ங்க. நான் அப்புறம் சொல்றேன்.
        ஒரு வழியாக 11 பேரும் ரெடியாகி (ஐயையோ எனக்கு தான் தாவு தீர்ந்துபோச்சு) அங்கு இலவசமாக கொடுத்த காண்டினெண்டல் பிரேக்ஃபஸ்ட்டை ஒரு வெட்டு வெட்டினோம். நான் ஓட்மீலை எடுத்தபோது, என் மனைவி திட்டி, "இங்கேயும் இத விடமாட்டீங்களா? வேற ஏதாவது சாப்பிடுங்கன்னு” சொன்னா. அப்புறம் நானே வாஃபில் (Waffle) செய்தேன். நல்லவேளை தரையெல்லாம் கொட்டியதை என் மனைவி பார்க்கவில்லை. சட்டென்று குனிந்து துடைத்துவிட்டேன். துடைத்து எழுந்த போது, என்னைப் பார்த்து முறைத்த என் மனைவியைப் பார்த்ததால், வழிந்த அசடையும் சேர்த்து துடைத்துவிட்டு எழுந்தேன். அவர் சிரித்தாளா முறைத்தாளா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்குள் வாஃபில் மெஷின் கூவ, அதனை லாவகமாக எடுத்து தட்டில்போட்டு, என் மனைவியிடம் கொடுக்கப் போனேன். "ஒரு வேலை ஒரு வேலை உருப்படியா செய்றீங்களா, ஒன்னும் தெரியாது" என்று சொன்னவள், என் கையில் இருந்த வாஃபிலைப்பார்த்துவிட்டாள். நிறம், மணம், குணம் நிறைந்த, அந்த வாஃபிலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, "பரவாயில்லையே சூப்பர்", என்று பாராட்டினாள். வஷிஸ்டர் வாயால ப்ரும்ம ரிஷி பட்டம் போல இருந்தது.

        பெருமிதத்தேடு கொஞ்சம் “மேப்பில் சிரப்”பை அதில் ஊற்றிக்கொடுத்தேன். வாஃபில் நன்றாகவே இருந்தது. அது ஒன்னும் பிரமாதமில்லிங்க. ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் மாவை, அதெற்கென வைக்கப்பட்டிருக்கும் கப்பில் சரியான அளவில் நிரப்பி, வாஃபில் மெஷினில் ஊற்றி விட்டு மெஷினை மறுபுறம் திருப்ப வேண்டும். உடனே டிஜிட்டலில் 3 நிமிட கவுன்ட் டவுன் ஆரம்பிக்கும். நேரம் முடிந்தவுடன் அதுவே “பீப்” பிட்டுக் கூப்பிடும். திறந்து எடுத்தால் சூடான வாஃபில் ரெடி. இதில் தவறாகப் போவதற்கோ கருகுவதற்கோ வாய்ப்பே இல்லை.
       இருந்த பல வகை ஜுஸ்களில் எனக்குப் பிடித்த கிரேன்பெர்ரி ஜூஸைக்கொஞ்சம் குடித்துவிட்டு வெளியே கிளம்பினோம். ஒன்றரை மணி நேரப்பயணத்தில் 'போர்ட்லேண்ட்" வந்து சேர்ந்தோம்.
    
பயணம் தொடரும் >>>>>>>>>>>
    
பின் குறிப்பு : சொல்ல மறந்திட்டேன்.நான் டிஸ்ட்ரிக்ட் லெவெலில் விளையாடியது “டென்னிக்காய்ட்”. அமெரிக்கன் கல்லூரி நண்பர்கள் சிரித்த காரணம், அது அதிகமாய் பெண்கள் விளையாடும் கேம்  என்பதால்.


12 comments:

  1. அண்ணே, "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (தனியாக போனால்), ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் (துணையோட போனால்), பாட்டு பாட வா (துணை நடந்து போனால்) இருக்கையிலே..இளையராஜாவின் "அந்தியில் பூத்த செவ்வந்திப்பூ". எதற்கு? இருந்தாலும் "வாஃபில்-மேப்பில்" என்பது கொஞ்சம் க(ர)டி சாயலாக தெரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. அஞ்சிக்கொண்டே பாடும் இன்னொரு பாடலும் உண்டு
      அச்சம் எனபது மடமையடா
      அஞ்சாமை திராவிடர் உடமையடா

      Delete
    2. அண்ணே, நான் திருமணம் ஆனவன். இந்த பாடலை பாட கூடாது என்று மனைவி ஆணையிட்டாள். வேண்டும் என்றால் "அச்சம் எனபது உடமையயடா அஞ்சாமை திராவிடர் மடமையடா" என்று பாடலாம்.

      Delete
    3. ஒ நீங்க சத்தமா
      பாடுவீங்க போலிருக்கு

      Delete
  2. பின்னிக்கு கார குழம்பு ..? பாவம்னே பின்னி

    ReplyDelete
    Replies
    1. போதும் போதும் ஓசில கிடைக்குதே

      Delete
  3. //கஷ்டத்திலும், நஷ்டத்திலும், இஷ்டத்திலும் இளையராஜாதானே நமக்குத்துணை.//

    அதானே... எங்கே போனாலும் இந்த இசை மட்டும் துணையிருந்தால் போதுமே!

    சுகமாகச் செல்லும் பயணத்தில் நானும் உங்களுடன் ஒரு ஓரமா ஒட்டிக் கொண்டு இருக்கிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. நேரில் வாருங்கள் வெங்கட் , இணைந்து பயணம் போவோம் .

      Delete
  4. அடடா.... என்னவொரு இனிமையான சுகமான பயணம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நேரில் வாருங்கள் திண்டுக்கல் , இணைந்து பயணம் போவோம் .

      Delete
  5. நேரில் வாங்க நேரில் வாங்க என்று சொல்லி நாங்கள் வந்த போது ஹாயா ஹாவாய் போய்விட்டீர்களே அண்ணே...

    ReplyDelete
    Replies
    1. நேரில் வாங்க பரவாயில்லை, இன்னும் நான் பார்க்க
      வேண்டிய இடங்கள் பல உண்டு .

      Delete