Monday, June 10, 2013

மெக்சிகோ பயணம் 15: பப்பாவும் பாப்பாவும் !!!!!!!!!!!!!!!

Souvenir Shop

                 நான்கு மணிக்கு மேல்தான் உள்ளே விடுவோம் என்றார்கள். வெளியே நிறைய சூவினர் (Souvenir) கடைகளும், உணவுக்கடைகளும் இருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டே அங்குமிங்கும் அலைந்ததில் அரைமணிநேரம் விரைவாகக்கடந்தது.              நம்மூர் ஹீரோக்களுக்கு வைப்பதுபோல், அன்றைய நாளில் விளையாடப்போகும் மூன்று வீரர்களுக்கு, பெரிய கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் அழகான சீருடை அணிந்த போலிஸ் படை வந்து இறங்கியது. அதன்பின்னர் ஒரு பெரிய கார் (பென்ட்லே என்று நினைக்கிறேன்) கடந்த போது, கூடியிருந்த கூட்டம் “மன்யோலா மன்யோலா” என்று ஆரவாரித்தது. பக்கத்தில் கேட்டதில் அன்று மோதப்போகும் வீரர் என்றார்கள். கார் கடந்து சென்று, வேற ஒரு வழியில் உள்ளே நுழைந்தது.
Entrance

              வரவர கூட்டம் நிறையச்சேர்ந்து வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். சரி உள்ளே போய்விடலாம் என நினைத்து, நுழைந்தபோது, டிக்கட்டை சரி பார்த்து கிழித்து பாதியை கையில் கொடுத்துவிட்டு என் கையை உற்றுப்பார்த்து, “பப்பாஸ் நோ” என்றான். என்னங்கடா இது நான் தனியாகத்தானே இருக்கிறேன், என்கூட பாப்பா ஒன்றுமில்லையே என்று கலவரமடைந்து 'ஙே' என்று முளித்தேன். அவன் என் கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டை தொட்டுக்காட்டி, “பப்பாஸ் நோ” என்றான். அப்போதுதான் புரிந்தது, சிப்ஸ் பாக்கெட்டை உள்ளே கொண்டுபோக முடியாது என்று. அதோடு அப்போதுதான் தெரிந்தது சிப்ஸ்க்கு இங்கே பெயர்  பப்பாஸ் (Papas) என்பது. ஆனால் இவ்வளவு பெரிய பாக்கெட்டை என்ன செய்வது என்று மீண்டும் வெளியே வந்து பிரித்து கொஞ்சம் சாப்பிட்டேன், முடியவில்லை. என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் அதைக்கொடுக்க, அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பானது.அமெரிக்காவில் இப்படி கொடுப்பது சாத்தியமில்லை, பிச்சைக்காரர்கள் கூட இப்படி ஏற்கனவே பிரித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
                     “கிராசியஸ்” என்ற சிறுவனிடம் புன்சிரிப்போடு தலையாட்டிவிட்டு மறுபடியும் வரிசைக்குச் சென்றேன். பேட்ஜ் அணிந்த பையன் ஒருவன் வழிகாட்ட முன் வந்தான். நடையோ நடந்து மேலே ஏறி, குகைகளை கடந்து உள்ளே நுழைந்தால், ஏயப்பா எவ்வளவு பெரிசு, சர்க்கஸ் மைதானம் போல் வட்டமாக நடுவிலே ஆடுகளம் இருக்க அதனைச்சுற்றிய வட்டங்களில் சிமென்ட் இருக்கைகள் மேலே மேலே இருந்தன.

 முதல் சில வட்டங்களில் பிளாஸ்டிக் நாற்காலிகள் இருந்தன. "பிளாசா மெக்சிகோ" என்ற உலகத்திலேயே மிகப்பெரிய காளைச்சண்டை அரங்கமான இதில் ஒரே சமயத்தில் 40,000 பேர் உட்காரலாம், 1946ல் இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
               அந்தப்பையன் என்னை அழைத்துக்கொண்டு நடுவில் இருந்த பாதை வழியே சென்று, இலக்கத்தை சரிபார்த்து அமர வைத்தான். போகாமல் நின்ற அவனைப்பார்த்து, ஓ என்று ஞாபகம் வந்துவிட 10 பீசோ கொடுத்தேன். ஒரு வெட்கச்சிரிப்பு சிரித்து விட்டு அகன்றான் . என்னுடைய சீட் மேலேயும் இல்லாமல்,  கீழே மிக அருகிலும் இல்லாமல் நடுவாந்தரத்தில் இருந்தது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்ப ஆரம்பிக்க, அந்த வெட்டவெளியில் நல்ல தென்றல் சிலுசிலுவென்று வீச ஆரம்பித்து, உடம்பில் சிலிர்ப்பைத் தந்தது. அங்கே நம்மூர் கீத்துக் கொட்டகைகளில் விற்பதுபோல், கைகளில் ஏந்தி பலவித பண்டங்களை விற்றனர். காபி, டீ தவிர ஆங்காங்கே இருந்த வழிகளில் ஐஸ் பியரும் விற்றார்கள். செம்பட்டைத்தலை பாப்பா ஒருத்தி, கறுப்புக் கண்ணாடி அணிந்து, ஏதோ கூவி விற்றுக் கொண்டிருந்தாள். கறுப்புக்கண்ணாடி ஸ்டைலுக்கா இல்லை கண்ணில் கோளாறா?  என்று தெரியவில்லை. எனக்கு முந்தின வரிசையில் வந்த அவள் கூவியதைக் கவனித்தேன்.”பப்பாஸ் பலோமாஸ்” என்றாள். பப்பாஸ் என்றால் சிப்ஸ் என்று சற்றுமுன்னர்தான் கண்டுபிடித்திருந்தேன். பலோமாஸ் என்றால் என்ன என்று தட்டைப்பார்த்த போது, அது பாப்கார்ன் என்பது தெரிந்தது. தட்டில் இரண்டே பொருள் இருந்ததால் பலோமஸ் என்றால் பாப்கார்ன் என்று கண்டுபிடித்த என் அறிவை, வேறுயாரும் மெச்சவில்லை என்பதால் நானே மெச்சிக்கொண்டேன். அதி சிவப்பான பெண்கள் கறுப்புக்கண்ணாடி அணிவது மேலும் அழகை நிச்சயமாய்க் கூட்டுகிறது. ஆனாலும்  சிப்ஸ் விற்பதற்கு கறுப்புக்கண்ணாடி ரொம்பவே ஓவர்.
Music bnd

                 தூரத்தில், எதிர்வரிசையில் மேலே இருந்து ஒரு இசைக்குழு விட்டுவிட்டு வாசித்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு பெண் ஒரு சிறிய புத்தகத்தை எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தாள். அநேகமாக எல்லோரும் வாங்கியதால் நானும் 2பீசோ கொடுத்து வாங்கினேன்.


 புரட்டினால் அதில் அன்று விளையாடவிருக்கும் வீரர்களின் படம், பெயர், சிறு வரலாறு மட்டுமின்றி அன்று வரப்போகும் காளைகளின் படங்கள், பெயர், வயது, எடை மற்றும் உரிமையாளரின் விவரங்கள் ஆகியவை அனைத்தும் கொடுக்கப்பட்டிருந்தன. ஏராளமான விளம்பரங்களும் இருந்தன. கொடுமை என்னன்னா, எல்லாமே ஸ்பானிஷில் இருந்தது. ஆங்கில எழுத்துகள் என்பதால் பல இடங்களில் யூகம் செய்ய முடிந்தது.
           கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பினாலும், அரங்கம் முழுவதுமாக நிரம்பவில்லை.இதற்கிடையில் என்னைத்தாண்டி வந்த 2 இளம் ஜோடிகள் என் அருகில் உட்கார்ந்தனர். என் பக்கத்தில் உட்கார்ந்த பெண் என்னை உரசுவதை தவிர்க்காமல் “ஓலா” என்று சொல்லி பிங்க் ஈறுகளை காண்பித்தாள் (வேனாம் இதெல்லாம் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது). பார்க்க அல்ட்ரா  மாடர்னாக இருந்தாள் என்பதால், ஒருவேளை இவள் உதவக்கூடும் என்ற நப்பாசையுடன் "ஹிஹி இதுதான் முதல்தடவை, இந்த விளையாட்டைப்பற்றி கொஞ்சம் சொல்கிறாயா?" என்றேன். "நோ இன்க்லிஸ்" என்றாள் மறுபடியும் பிங்க் ஈறுகள். போடி இவளே பார்க்கத்தான் படாடோபமாய் இருக்கிறார்கள், ஆங்கிலம் தெரியவில்லை என்று நொந்து கொண்ட சமயத்தில், அவள் பக்கத்திலுள்ள இன்னொருவளிடம் கிண்கிணி கிண்கிணி என்று பேசிவிட்டு என்னைக் காண்பித்தாள்.
இருவரும் மாறி உட்கார்ந்து கொண்டு, இன்னொருவள் "வேர் ஃப்ரம்" என்றாள், நியூயார்க் என்றதும், நம்பாது கோணச்சிரிப்பு சிரித்தாள். "இன்டியன், லிவ்விங் இன் நியூயார்க்" என்றேன். ஓ என்று சொல்லிவிட்டு, காளைச் சண்டையைப்பற்றி தன்  ஓட்டை இங்கிலீஸில் விளக்க முயன்றாள். அவள் சொன்னதில், எனக்கு புரிந்தவை.
       மூன்று வீரர்கள் (டொரெரோ) ஆளுக்கு 2 காளைகளோடு மோதுவார்கள். ஒரு காளைச்சண்டை சுமார் 1/2 மணி நேரம் நடக்கும். ஒவ்வொரு வீரருக்கும் ஆறு உதவியாளர்களும், 2 குதிரை வீரர்களும் உதவுவர். மைதானத்தில் இருவட்டங்கள் வரையப்படும். இன்னர் ரிங் மற்றும் அவுட்டர் ரிங், விளையாட்டு வீரர், காளையுடன் நேரடியாக மோதும்போது இன்னர் ரிங்கில் மோதுவர் என்றாள்.இது போதுமம்மா தாயி, என்று நினைத்து கும்பிட்டு நன்றி சொன்னேன். நடுநடுவில் தன்னையறியாமல் ஸ்பானிஷிக்கு சென்று மன்னிப்புகோரி, ஆங்கிலத்திற்கு வந்து அவள் விளக்கியது வேடிக்கையாக இருந்தது. இதற்கிடையில் மைதானத்தில் சிலர் வந்து, கோடுகளை திருத்தி, நம்மூர்போல் வெள்ளைப்பொடி தூவி பிரித்தனர்.
Procession

                மைதானம் மக்களால் களைகட்ட, பக்கத்தில் இருந்தவர் ஆண்பெண் வித்தியாசம் இல்லாமல், குளிர் பியர்களைக் குடித்து சூடாகிக் கொண்டிருந்தனர். திடீரென்று உச்சஸ்தாயியில் பேண்ட் வாத்தியக்குழு டிரம்பெட்டுகளை இசைக்க, ஒரு ஊர்வலம் கிளம்பி வந்தது. முதலில் ஊழியர்கள் தங்கள் சிறுவண்டிகள் மற்றும் சிறு கருவிகளோடு வந்தனர். அவர்கள் பின்னால் யூனிபார்ம் அணிந்த ஒரு குழு நடந்து வந்தது. அவர்கள் பின்னர் குதிரை வீரர்கள் தங்கள் நீண்ட ஈட்டிகளோடு வர, அவர்கள் பின்னால் காளை வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். பளபளப்பான உடையில் ராஜகுமாரர்கள் போல், இடையில் வாள் அணிந்து வந்தவர்களில் முதலில் ஃபேபியன் பார்பாவும் இரண்டாவதாக டேவிட் மோராவும் மூன்றாவது மனோலா  மேஜியாவும் கம்பீரமாய் நடந்து வந்தனர். கடைசியாக வந்தவரைத்தான் நான் வெளியே இருந்துவந்த காரில் பார்த்தேன்.
மனோலா உள்ளே வந்த மாத்திரத்தில், முழுக்கூட்டமும் எழுந்துநின்று  மன்யோலா மன்யோலா என்று ஆரவாரம் செய்ததில், அரங்கம் மட்டுமல்ல என் காதுகளும் அதிர்ந்து போயின. நடுத்தர வயதில் மற்ற இருவரைக் காட்டிலும் குட்டையாக இருந்த அவருக்கு வரவேற்பு பலமாக இருந்தது. மூவரும் சென்று மறுபுறத்தில் உட்கார்ந்திருந்த யாரோ ஒரு விஐபிக்கு வணக்கம் சொல்லிவிட்டு எனக்கு நேர் கீழே இருந்த ஒரு பாக்சுக்குள் நுழைந்தனர்.
சிறிதுநேரத்திலேயே, எனக்கு நேரே எதிர்ப்புறத்தில் ஒரு திட்டிவாசல் திறக்கப்பட, வருதய்யா ஒரு காளை சீறிக்கொண்டு.


இன்னும் வரும் >>>>>>>>>>>>

6 comments:

  1. சுவாரிசியமா எழுதுறீங்க பாஸ்..
    நானும் மெக்ஸிகோ பக்கத்து ஊர் தான், சாண்டியேகோ.. மெக்ஸிகோ ட்ரிப் போற ஐடியா இருக்கு. உங்க தொடரை இப்ப தான் படிச்சிட்டு வரேன். இது எந்த ஊரு.. மெக்ஸிகோ சிட்டியா..??

    ReplyDelete
  2. பாஸ், கமென்ட் போடும் போது "Word Verification" option வருது..
    அதை disable பண்ணுனா நல்லா இருக்கும்.
    Steps to disable :
    1) Blogger --> Settings --> Posts and comments -- > Show word verification --> change to NO.

    Happy Blogging..!!!

    ReplyDelete
    Replies
    1. Dear Raj,
      I have taken care of that. Thanks for ur suggestion.

      Delete
  3. பிச்சைக்காரர்கள் கூட இப்படி ஏற்கனவே பிரித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள///நம்மூரிலும் அப்படியும் இருக்கிறார்கள் பணம் காசு மட்டுமே கேட்பார்கள்.
    உங்களின் பயணக் கட்டுரை அருமை மகிழ்ந்தேன்

    ReplyDelete
  4. தங்கள் பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete