Wednesday, May 15, 2013

மெக்சிகோ பயணம்-11 : கமல்ஹாசனுக்கே கத்துக்கொடுப்பாய்ங்க போல இருக்கு

Xochimilco River


     சாப்பிடுவதற்கு பெரிய ஹோட்டல் போக வேண்டுமா? அல்லது பாரம்பர்ய ரோட்டுக்கடையா? என்று கேட்டான். சுத்தம் சுகாதாரமாய் இருக்கும் எந்த இடத்திலும் சாப்பிடலாம் என்றேன்.
     அரை மணி நேரத்தில் போய்  விடலாம் என்று சொல்லிவிட்டு, சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பின்னர், ஒரு மார்க்கெட்டுக்குச் சென்றோம். புரிந்துவிட்டது மெக்சிகோவில் 1/2 மணிநேரம் என்றால் 1மணிநேரம் ஆகுமென்று. சாட்சாத் நம்மூர் சைதாப்பேட்டை மார்க்கெட் போலவே இருந்தது.
     வேகவைத்த கப்பைக்கிழங்கை, வெட்கத்தைவிட்டு வாங்கிக்கொண்டேன். உள்ளே, உள்ளே,உள்ளே நுழைந்து பார்த்தால், பலசிறிய உணவகங்களும் பலவிதமான பண்டங்களும் சுடச்சுட உடனடியாக கண்முன்னால் செய்து தந்தனர்.
Xochimilco Market


    இரு அழகிய விடலைப்பெண்களும், ஒரு பையனும் கூவிக்கூவி அழைத்தனர். டானியல் அவர்களைத்தவிர்த்து, அதன் பக்கத்து கடைக்கு ஒரு வயதான தம்பதியிடம் அழைத்துச் சென்றான். (ரசனையில்லாதவன்).
     டேனியல் என் முகத்தைப் பார்த்து, “இங்கே தான் நன்றாக இருக்கு”மென்று சொன்னான். (கண்டு புடிச்சுட்டான் போல) அவன் சொன்னது போலவே அந்த விடலைக்கடைக்கு யாரும் போவதாகக் காணோம். அந்த வி.பையன் திரும்பி அந்த வி.பெண்களில் ஒருவரை முத்தமிடத் தொடங்கினான். மெக்சிகோ இதுலேயும் நன்றாகவே முன்னேறியிருந்தது. கமல்ஹாசனுக்கே கத்துக்கொடுப்பாய்ங்க போல இருக்கு.
    எனக்கு ஒன்றும் தெரியாதென்பதால், டேனியலை ஆர்டர் செய்யச் சொல்லிவிட்டு, உயர்ந்த ஸ்டூல்களில் அமர்ந்தோம். ஒரே நேரத்தில் அந்த ஒரு கடையில் அதிகபட்சம் நான்குபேர்தான் உட்காரமுடியும். எங்கள் கண்முன்னால் ஒரு சிறிய தோசைச்சட்டியில் ரொட்டிகளைச்சுட்டு தந்தார்கள். மக்காச்சோள ரொட்டி, ஆனால் பச்சை நிறத்தில் இருந்தது. எனக்கு வெஜிடேரியன் போதுமென்றதால், ஒருவகைப் பூக்களால் செய்த கூட்டு கொடுத்தார்கள். அந்த காம்பினேஷன் நன்றாகவே இருந்தது. இரண்டே ரொட்டிகளில் வயிறு திம்மென்றாயிற்று, டேனியல், அதே ரொட்டிக்கு போர்க் கிரேவி தொட்டுச் சாப்பிட்டான். சாப்பிட்டான் , சாப்பிட்டான்  சாப்பிட்டுக்கொண்டே  இருந்தான் . சரியான பாம்பு  வயிறான் போல இருக்கு.
    பக்கத்துக்கடையில் முத்தம், மொத்தமாகவும் சற்றே சத்தமாகவும் இருந்தது. வரவர அறுவெறுப்பாயிருந்தது. ஒரு அளவு வேண்டாம், பசியெடுத்தால் சாப்பிட வேண்டியதுதானே என கோபம் கோபமாய் வந்தது. அதனால்தான் அங்கு யாரும் போகவில்லை என நினைத்தேன்  (சரி விட்றா விட்றா உனக்கேன் இவ்வளவு கோபம்?. இல்லை மச்சான் ஒரு நாகரிகம் வேணாம்? பப்ளிக் பிலேஸ்ல).
     உண்டு முடித்து Xochimilco ஆற்றுக்குச் சென்றோம். சோஷிமில்கோ என்பது மெக்சிகோவின் ஃபெடரல் மாவட்டங்களான 16 மாவட்டங்களுள் ஒன்று. ஸ்பெயினின் ஆக்ரமிப்புக்கு முன்பே, இங்கிருந்த பெரிய ஏரியோடு இணைந்து, மெக்சிகோ பள்ளத்தாக்கின் பல பகுதிகளை இணைக்கும் வண்ணம், வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. 110 மைல்கள் நீளமுள்ள இந்த வாய்க்கால்கள் ஆங்காங்கே சிறுசிறு தீவுகளை (Chinampas) உண்டாக்கின. அப்போது போக்குவரத்திற்கு பெரிதும் பயன்பட்ட இவை, இப்போது, வெனிஸ் நகரத்தில் உள்ள கொண்டலா  (Gondola) போல பல உல்லாசப்படகுகள் (Trajineras) செல்லும் உலக ஹெரிடேஜ் இடமாகும்.

     பார்க்கிங் லாட்டில் இடம் இல்லாததால் அங்கிருந்த சிறுசிறு உணவங்களின் முன்னே  இருந்த இடங்களும் கார்கள் நிறுத்துமிடமாக மாறி காசு வாங்கிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு பெரிய கார்னிவல் நடப்பது போல், நடைபாதையெங்கும் பெட்டிக்கடைகளும், ரோட்டோரக் கடைகளும் நிறைய முளைத்திருந்தன. ஒரு சந்தில் படக்கென திரும்பியதும், ஏராளமான படகுகள் நீரை மறைத்து நின்றிருந்தன.
    டேனியல் மெக்சி டூர் நிறுவனத்தின் ஆளைக் கண்டுபிடித்து, முகமன் கூறி என்னை அறிமுகம் செய்தான்.  வாருங்கள் ஆல்ஃபிரடோ (?) என்று கைகுலுக்கிய தண்டுவலித்து முண்டு கட்டியிருந்த இறுகிய கைகளிலிருந்து, விண்டு விடுமென்று என்னுடைய என்புதோல் போர்த்திய கைகளை லாவகமாக தப்பித்துப்பின்பற்றினேன்.
     பல படகுகளின் வழியே நடந்து எங்கள் படகுக்குச் செல்லுமுன் எனக்கு இரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. சதா ஆடும் படகுகளில் ஓடும் அந்த ஆளை சற்று நேரத்தில் தேடும் நிலை வந்துவிட்டது. (ஏய் வந்துட்டான்யா வந்துட்டான்யா ஒரு பழைய கவிஞன்).

     படகுகளை தாண்டி தாண்டிச் செல்வது பெரிய சாகச சர்க்கஸ் ஆக இருந்தது. எதுக்கு ரிஸ்க்கஸ் என்று அப்படியே ஒரு படகின் நடுவில் இருந்த பெஞ்ச்சில்  உட்கார்ந்துவிட்டேன். சிறிது நேரத்தில் டேனியல் தேடிக்கொண்டு வந்தான். “என்னாச்சு?” என்று சிரித்தான். “ஐயா சாமி, நட்டாத்துல விடறது என்பது இதானா? எங்கூடவே வாப்பா” என்றேன். படகுவிட்டு படகு தாண்டும் இடங்களில் மட்டும், வெட்கத்தைவிட்டு (உயிர் அதைவிட முக்யம்ல) அவன் கட்கத்தைப்பிடித்துக் கொண்டு நடந்து நடந்து கடந்து கடந்து, ஒரு ஐம்பதுக்கும் மேல் கடந்த பிறகுதான், சிறிது இடைவெளியில் நீர் தெரிந்தது. படகுகள் விடுவதற்கு ஒரு அளவில்லையா என்று டேனியலைக் கடிந்து கொண்டு (அட முட்டாளு  டேனியல் மெக்சிகோவின் இளவரசனா!), எங்களுக்கான படகில் ஏறினோம்.
     ஆறு முழுவதும் அலங்கரிக்கப்பட்ட படகுகள் மிதந்தன. ஒவ்வொரு படகிலும் ஆட்டமும் பாட்டமுமாக ஒரே அமர்க்களம்தான் போங்க. இதுல நடுநடுவே "மாரியாச்சி" பாடகர்கள் குழு தனிப்படகுகளில் அருகில் வந்தது. ஒரு 100 பீசோ கொடுத்தால் உங்களுக்காக இரண்டு மூனு பாடல்கள் பாடுவார்கள்.
     இந்த மரியாச்சி என்பது (ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்யா - ஆர்வம் இருப்பவர்களை மட்டும்தானே படிக்கச் சொல்றேன். - இந்த மைண்ட் வாய்ஸ் மகேந்திரன் தொல்லை வேறு), ஒருவிதமான மெக்சிகன் ஃபோல்க் இசை, இரண்டு நூற்றாண்டுகளாக தழைத்து வளர்ந்திருக்கிறது. யூடியூபில் தேடினால் கேட்கக்கிடைக்கும். (www.youtube.com/ watch?v =tmUJyeJehsM).
Mariachi Singers

     பியர்களை குடித்துக்கொண்டும் (நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லையே) அதிரடி இசைக்கு துடித்துக்கொண்டும் இருந்தனர். தண்ணி மேலே படகு, படகு மேலே தண்ணி (எப்பூடி). உள்ளேயும் தண்ணி , வெளியேயும் தண்ணி. படகிலும் தண்ணியிலும் மிதந்து கொண்டு இருந்தவர்களைப் பார்த்தபோது, ஏதோ வேறு உலகத்திற்கு வந்ததுபோல் இருந்தது.
T

     படகுப்பயணம் முடித்து திரும்பும்போது, சல்லிசாக கிடைத்த இளநீரை பருகிவிட்டு (டேஸ்ட்டு  வேஸ்ட்டு, நம்மூர் போல இல்லிங்கோ) நிற்கும் போதுதான் ஞாபகம் வந்தது. நாளைமாலைதான் அடுத்த எங்கேஜ்மென்ட் என்று. டேனியலை ஒரு ஓரமாகத் தள்ளிக்கொண்டுபோய், “நீ நாளைக்காலைல ஃப்ரீயா” என்று கேட்டேன். “ஆம், ஏன்?” என்று வினவியபோது, காதோடு கதைபேசி ஒரு டீல் போட்டேன். அத  அப்புறமா சொல்றேனே.


4 comments:

  1. ஒரே ஒரு மெக்சிகோ படம் பார்த்தேன். பெண்ணின் கல்யாணம் வரதட்சணைத் தகராறில் நின்றுபோக .. ஒரே சோகம்... கற்றாழையில் ஏதோ ஒரு மது .. நம் நாட்டு மாட்டுக்குப் பதில் அங்கே கழுதைகள் .. கத்.கிறித்தவர்கள் தேர் தூக்கி கோவிலில் விசேஷம் .. இப்படியாக நம் நாட்டைப் பிரதிபலித்தது போல் பார்த்த நினைவு;

    அப்டியா ..?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் , நமது நாட்டு பழக்க வழக்கங்கள் பலவற்றை அங்கே பார்க்கலாம்.

      Delete