Monday, January 28, 2013

எக்ஸ்கியூஸ் மி, கேன் யு கிவ் மி சம் டிப்ஸ்?- மெக்சிகோ சலவைக்காரி-2





 என்னடா நாலே நாள்ல அடுத்த சாப்டரை எழுதுறேன்னு நடுவானத்துல விட்டுட்டுப் போனவன், ஒரு வாரங்கழிச்சி வந்திருக்கானேன்னு யோசிக்கத்தான் செய்வீங்க. எழுத்தாளனுக்கு முதல் அந்தஸ்தேபில்ட்-அப்தான்னு ஒரு ஃப்ரெண்டு சொன்னார். அந்த ட்ரெண்டையும்  கொஞ்சம் ஃபாலோ பண்ணிப்பாத்துடலாமேன்னுதிங்கிங்மோட்ல ஒரு ரெண்டு நாள் லேட்டாயிடுச்சி. மறப்போம், மன்னிப்போம்னு பெருந்தன்மையோட படிச்சிட்டு வாங்க.
சரி, மெக்சிகோ மேட்டருக்கு வர்றேன். ஃப்ளைட் கிளம்ப ஆரம்பிச்சதும் வயிற்றுக்கும், தொண்டைக்கும் நடுவுல ஒரு உருண்டையும் உருளுதடின்னு ஒரு அடி எடுத்து வச்சேனா, அது வேற ஒண்ணுமில்லை. இருபது வருஷ விமானப்பயண அனுபவத்துல நம்மள விட்டு நகலாத டென்சன் சனியன். ஒரு கேள்விக்கு கூட பதில் தெரியாம முழிக்கிற, ஃபைனல் இயர் எக்ஸாம் எழுதவந்த பையன் மாதிரியேதான் தோணுது, எனக்கு ஒவ்வொரு விமான பயணமும்,...
9 மணிக்கு கிளம்பி, சரியா மூனு மணிநேரத்துல விமானம் மியாமியை ரீச் ஆயிடுச்சி. மெக்சிகோவுக்கு சாயந்திரம் 4 மணிக்குத்தான் ஃப்ளைட். கேப் கிடைச்ச 4 மணிநேரத்தை, உலகத்துல வேற எந்த ஜீவராசியா இருந்தாலும், மியாமி பீச்ல போய்கண்டுகழிக்கனும்னுதான் ஆசைப்படும். ஆனா நானோ விண்டோ ஷாப்பிங் பாக்கலாமுனு மெல்ல வீதி வீதியா நடந்து, எதுவும் வாங்காம, வெட்டியா அலைஞ்சிக்கிட்டிருந்தேன். எல்லாக் கடைகளுக்கும் போய் மெனக்கெட்டு மெனு கார்டு வாங்குறதும், விலைப்பட்டியலைப் பார்த்து துணுக்குற்று, ரிடர்ன் ஆகுறதுமா என் டைம் பாஸ் ஆகிக்கிட்டிருந்துச்சி.
அந்த நேரம் பாத்து, ,..’இன்னும் கொஞ்சம் தள்ளி வாடா தம்பின்னு என்னை ஏதோ ஒரு அசரீரி அழைச்சமாதிரி இருந்துச்சி. நெருங்கிப்போய்ப் பாத்தா அட நெல்லுச்சோறு. இந்த நெல்லுச்சோத்தை எங்க பாத்தாலும் தன்னை மறந்து, ஜொள்ளு விடுறது தமிழனோட தலையாய தரித்திரங்கள்ல ஒண்ணுங்குறது தர்மசங்கடத்தோட ஒத்துக்கவேண்டிய உண்மை. ஒரு நல்ல கறிச்சோத்தை பொண்டாட்டி கையால சாப்பிட்ட ஈரம் காயாதது கூட மறந்து, காய்ஞ்ச  எருமை மாடு மாதிரியே அந்த நெல்லுச்சோத்தில பாஞ்சேன். [15 யு.எஸ்.டாலர்.] உப்பு, உறைப்பு எதுவும் இல்லாத அந்த சாப்பாட்டுல கைவச்சது ரொம்பத்தப்புன்னு முதல் வாய் வச்ச உடனே தெரிஞ்சதுன்னாலும், வேற வழியில்லாம பசிக்காக ஒரு வெட்டு வெட்டினேன். வெட்டி வேலை முடிந்து தண்ணீர் குடிக்கப்போனால்  சோடாவை ( Coke Pepsi yaithaam ingey soda yenbargal)சிபாரிசு செஞ்சாய்ங்க.  சோடாவெல்லாம் வேணாம் போடா என்றபடி, தண்ணீர் வரும் குழாய் என்று ஒருவர் காட்டிய குழாயைத் திறந்தால் பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் வெளியேறி என்னைப்பயமுறுத்திச்சி.  இன்னைக்கு சனியன் நம்ம கூட ஓவரா சடுகுடு ஆடுதே என்ற எண்ணத்துல, தண்ணீர் வந்த இன்னொரு குழாயைத்திறந்து, மாத்திரைகளையும் சேர்த்து மடக்கி விட்டு ஆசுவாசமாகப்போய், விமான நிலையத்தில் அமர்ந்தப்போ, ‘மெக்சிகோ விமானம் கிளம்ப இன்னும் 90 நிமிடங்கள் இருக்கின்றன’  அறிவிப்பு வந்தது.
இனியும், அங்கிட்டு இங்கிட்டு நடமாடி எதற்கு சில வம்புகளை வாங்கிட்டு என்று நினைத்தபடி, ரா.கி.ரங்கராஜனின் ;நான் கிருஷ்ணதேவராயனை ஓப்பன் பண்ணியபடி ஒரு மூலையில் உட்கார்ந்தேன். நம்மை படிக்க விடுவார்களா? ‘ எக்ஸ்கியூஸ் மிஎன்றபடி ஒரு அழகுப் பதுமை என் பக்கத்துல,.. நானோ வாயடைச்சி ஆனந்த துக்கத்துல. பார்ட்டி பார்க்க கொஞ்சம் மாடர்னாக இருந்ததால, மாடலாக இருக்கலாம்ங்குற  எண்ணத்தில,மாட்லாடத்தொடங்கினால்,… அட நம்ம ஜாதி. பிஸினஸ் மேனேஜ்மெண்ட் ஃபிகர்.
கிருஷ்ணதேவராயரைக் கிடப்பில் போட்டுவிட்டுதொண்டையைக் கணைத்தபடி திரும்பினா,.. ஒரு ஜந்துவை விட கேவலமாக எண்ணி, அவ  தனது லேப்-டாப்பில டாப் அடிச்சிருந்தா. ‘என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனைஎன்று மனசு மானம் மரியாதை பார்த்தாலும், ‘ எக்ஸ்கியூஸ் மி. திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் மெக்சிகோ ட்ரிப். கேன் யு கிவ் மி சம் டிப்ஸ்’- சற்றும் கூச்சநாச்சமில்லாம ஹோட்டல் சர்வர் ரேஞ்சுக்கு இறங்கினேன்.
எவ்வளவு காலத்துக்குத்தான் பெண் என்றால் பேய் மட்டுமே இறங்கி வருவது. பேய்களுக்காக எப்போதாவது ஒருமுறை பெண்ணும் இறங்கி வரலாமேன்னு அந்தப்பொண்ணு  நினைச்சாளோ என்னவோ, அவள் லேப்-டாப்பை விட்டு இறங்கி வந்து என்னோடு கொஞ்சம் பேசலானாள் அவ பேரு எரிக்கா.
இரவு பத்து மணிக்கு மேல் வெளியே சுற்றவேண்டாம். ஷ்பானிஷ் மொழி தெரிந்தால் நல்லதுஎன்று துவங்கி சுவாரசியமற்ற சில டிப்ஸ்கள் கிடைத்ததைத் தாண்டி, வேற ஒண்ணும் விஷேசமா  எரிக்காகிட்ட இருந்து கிடக்கலை.
கிடைச்ச  ஒரே ஆறுதல் அவளோட  பிசினஸ் கார்டு. ‘மெக்சிகோவில் ஏதாவது பிரச்சினை என்றால் என் தாய்வீட்டைத் தொடர்புகொள் உதவுவார்கள்னு தந்தி மாதிரி சுருக்கமா சொல்லிட்டு பழையபடி அவ   லேப்-டாப்புல லேண்ட் ஆயிட்டா.
ஷ்பானிஷ் மொழி சங்கீதம் மாதிரி என் காதில் விழுந்ததுன்னுநம்ம சாருநிவேதிதா எப்பவோ எழுதுனதை ஞாபகப்படுத்துற மாதிரி ஷ்பானிஷ் மொழியிலயும், இங்கிலீஷ்லயும் அறிவிக்க ஆரம்பிச்சி, நம்ம மெக்சிகோ விமானம் றெக்கை விரிக்க ஆரம்பிச்சிச்சி.
வழக்கம்போல ரொம்ப வயசான ஏர் ஹோஸ்டஸ்ங்க,வழிசலோட வரவேற்க, அட்லீஸ்ட் ஒரே ஒரு ஆறுதலாவது இருக்கட்டுமேன்னு எரிக்காவை அங்க இங்க ஏறிட்டுத்தேடுனேன்.தேடும் கண் பார்வை தவிச்சதுதான் மிச்சம். ரொம்ப பின் சீட்டுக்குப் போயிட்டாங்க போலன்னு மனசைத் தேத்திக்கிட்டு, ’கிருஷ்ணதேவராயரைக் கையில எடுத்துக்கிட்டு படிக்க ஆரம்பிச்சேன். திடீர்னு பக்கத்து சீட்ல நம்ம சுஜாதா வந்து உட்கார்ந்தார்,...



Friday, January 18, 2013

’மெக்சிகோ நாட்டு சுஜாதாவின் சலவைக்காரிகளைத் தேடி,..





ப்ளாக்எழுதியே தீருவது என்று தடாலடியாய் இறங்கிவிட்டேனே ஒழிய, அதை பெருவாரியான மக்களைப் படிக்கவைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. சரி, ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் நண்பர்களை அணுகி ஆலோசனை பெறலாம் என்று பார்த்தால், அதில் அநேகரும், அநேக சமயங்களிலும், தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருக்கிறார்கள்.
 இன்னும் சிலரோஉனக்கு என்னாத்துக்கு இந்த வெட்டி வேலைஎன்பதுபோலவே எளக்காரமாகப் பார்க்கிறார்கள்.
சரி, இப்போதைக்கு, நமது ஃபேஸ்புக்கில் மட்டும் நிலைத்தகவலில் போட்டு வைப்போமே என்று முடிவுசெய்து, அதையே செய்தபோது, நேற்றுவரை என்பால் இரக்கம் கொண்டு சுமார் 200 பேர் வரை விஜயம் செய்திருந்தார்கள்.’என்னடா கமெண்டுகள் எதையும் காணோமேஎன்று ஒரு நண்பனிடம் கதறி அழுதபோது, ‘உன்னைப் பத்தி ஒரு பத்து பதிவாவது படிச்ச பிறகுதான், கமெண்ட் எழுதுறது பத்தியே கன்சிடர் பண்ணுவாங்க. அதுவரைக்கும் அநாவசியத்துக்கு அலட்டிக்காம, சின்சியரா கண்டினியூ பண்ணுஎன்றார்.
இருநூத்திச்சொச்சம் பேர் என்பது யானைப்பரதேசிக்கு இது சோளப்பொறிதான் என்றாலும், வருங்காலத்தில் லட்சக்கணக்கில் படிக்கவருவீர்கள் என்ற நம்பிக்கையில் எனது லட்சியத்தைத் தொடருகிறேன்.
இதற்குமுன் எழுதவேண்டியவை ஆயிரக்கணக்கில் இருந்தாலும், எனது மெக்சிகோ பயணத்திலிருந்து ப்ளாக்பயணத்தை தொடங்கவே நான் விரும்புகிறேன்.
காரணங்கள் மூன்று.
70-களில் முத்து காமிக்ஸ்-ல் படித்து இன்னும் தலையிலிருந்து அகலாததலைகேட்ட தங்கப்புதையல்உட்பட்ட சில நாவல்கள் தூண்டிய ஆவல்கள்.
அடுத்ததாக எனதுநீண்டநாள் நண்பேண்டா ஜேம்ஸ் போத்திராஜுலு, 2010-ல்,மெக்சிகோ பயணம் மேற்கொண்டு அளந்த, அளப்பரிய கதைகள்.
மூன்றாவதாக, கடைசி வரை புதிரை அவிழ்க்காமலே தத்தளித்து விட்டுப்போன நம்ம சுஜாதாவின் மெக்சிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ்.அந்நாட்டின், ஒரு சலவைக்காரியையாவது நேரில் சந்தித்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது என்று மனைவிக்குக் கேட்க்காதவாறு மனதுக்குள் சபதம் மேற்கொண்டேன்.
பயணத்திட்டங்கள் வகுத்து, விமான டிக்கட் எடுத்து, ’மெக்சிகோ போனாலும் மச்சினன் துணை வேணும்என்ற பழமொழிக்காக, வஞ்சகமில்லாமல் வளர்ந்திருந்த மைத்துனன்  பெஞ்சமின் சாமுவேலை வரவழைத்து, நவம்பர் 29[2012] ஒருவழியாக விமானதளத்தையும் அடைந்துவிட்டோம்.
நியூயார்க்கின் ஜான்.எஃப்.கென்னடி விமான நிலையத்திலிருந்து மியாமி சென்று, அங்கிருந்து கன்னெக்டிங் ஃப்ளைட்டில் மெக்சிகோ செல்லவேண்டும்.
என்னை இறக்கிவிட்டுவிட்டு, பெஞ்சி சில அடிகள் கூட சென்றிருக்கமாட்டான். செல்போனில் அலறி அடித்து அவனை அழைத்தேன். ’என்னுடைய பயண டிக்கட் உட்பட்ட கோப்பைக் காணவில்லைஎன்றதும்என்ன கலர்னு சொல்லுங்க, வீட்ல தேடிப்பாத்து எடுத்துட்டு வர்றேன்என்றான் கொஞ்சமும் சலிப்பின்றி. எனக்கோ 38 டிகிரியிலும்  ஒரு கணம் வேர்த்து, சலவைக்காரிகளுடனான சந்திப்புக்கு இப்படி ஒரு அல்ப்ப ஆயுசா? என்ற எண்ணம் மின்னலாய் வந்து மறைந்தது.
அவனுடன் பேசியபடியே, இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து தேடியபோது, பேக்கின் எதிர்பாராத ஒரு ஏரியாவில், அந்த கோப்பு தென்பட, ஒரு பெருங்கோப்பை அளவுக்கு அசடு வழிந்தபடி, பெஞ்சியை அனுப்பி வைத்தேன்.
ஒருவழியாய் பயணத்துக்கு தயாரானேன். எல்லாம் நமது சேஃப்டிக்குத்தான் என்றாலும், விட்டால் ஆஃப்-பாயில் போடலாம் என்கிற அளவுக்கு, மண்டையை சூடாக்கும் செக்யூரிட்டி செக்-அப்கள்.
மூன்றுமணிநேர பயணத்துக்குத்தயாராகி, அந்த சின்ன ஃப்ளைட்டில் அமர்ந்தபோது, கடந்த இருபது வருட கால ஏமாற்றத்தின் தொடர்ச்சியாய், என்னை அப்செட் ஆக்குவதற்கென்றே அவதாரம் எடுத்து வந்த முதிர்கன்னிகள்தான் ஏர்ஹோஸ்டஸ்களாய், அந்த ஃப்ளைட்டிலும் ஏறியிருந்தார்கள்.
சுஜாதாவின் மெக்சிகோ நாட்டு சலவைக்காரிகளுக்கு இப்படி ஒருபோதும் வயதாகியிருக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு, அவரது நண்பர் ரா.கி.ரங்கராஜனின்நான் கிருஷ்ணதேவராயன்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். [ரா.கி..வை நியூயார்க்கில் வைத்துதிராவிடியன் டி.வி.க்காக பேட்டி எடுத்தது, திடீரென்று நினைவுக்கு வந்து போனது.அது குறித்து அப்புறம் பேசலாம்.]
விமானத்தில் தண்ணீர், கடலைக்கொட்டை போன்ற சின்ன சமாச்சாரங்களைக் கூட யானை, குதிரை விலைக்கு விற்றார்கள். நான் ஒரு சுமாரான கஞ்சன் என்பதால், எதையாவது வாங்கிச் சாப்பிடலாமா என்று தோன்றும் போதெல்லாம், ‘அட கொஞ்சம் முந்திதான வீட்ல மனைவி கையால ஓட்ஸ் சாப்பிட்டோம்என்று வயிற்றுக்கு மெஸேஜ் அனுப்பி, மனசுக்கு கடிவாளம் போட்டுக்கொண்டேன். போதாக்குறைக்குகும்கியானை சாப்பிடவேண்டிய சைஸில் ரெண்டு நேந்திரம் வாழப்பழங்களும் என்வசம் இருந்தன.
சரியாய் ஒன்பது மணிக்கு விமானம், மியாமியை நோக்கி சிறகை விரிக்க ஆரம்பிக்க, என் மனசு படபடக்க ஆரம்பித்தது. வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நடுவில் ஏதோ உருண்டு ஓட ஆரம்பித்தது,..
என்ன நட்டநடு வானத்துல நிறுத்திட்டுப்போறானேன்னு நெனக்காதீங்க,.. இன்னும் நாலே நாள்ல பயணத்தைத் தொடருவேன்,..